Wednesday, February 13, 2008

தோழர் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலமறிய ஆவல். தாங்கள் மோடி, ஜெயா வை பற்றி தெரிவித்த கருத்துக்களில் எமக்கு வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் அந்த பார்ப்பனீய சக்திகள் மக்களை பல்வேறு குழுக்களாக மாற்றியிருக்கிறார்கள் மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், கீழ்தரமக்கள், அடிமைகள் என பல குழுக்களாக பிரித்து ஏமாற்றிகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பணியிலும், சமத்துவத்திலும் நாட்டமில்லை, மாறாக பணம், உடலுழைப்பில்லாத சுகவாழ்வு இதை தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மக்களிடம் சமநீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயல்படவேண்டும், ஆனால் அரசு முதலாளித்துவத்தின் பினாமிகளாக இருக்கும் வரை இது சாத்தியமல்ல. நாம் தேர்தலை புறகனித்து ஒரு மக்கள் புரட்சியை நடத்தி மக்களாட்சியை நிறுவ வேண்டும் என்பதில் வேகம் காட்டவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் புரட்சி தீ கனல்விடாத வண்ணம் அரசு அடக்குமுறையை சட்டத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடுகிறது. இதற்கு அஞ்சி மக்கள் இப்படிபட்ட போராட்டங்களில் பங்கெடுப்பதில்லை. ஒன்று மறுக்கமுடியாத உண்மை எந்த போராட்டத்திலும் பெரும்பாண்மையான மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பங்கெடுக்காவிடில் அந்த போராட்டத்தின் முழு பலனையும் அடையமுடியாது. இன்றைக்கு நாடே காலணியாகி வரும் வேளையில், இந்த மக்கள் அடிவருடி வாழ்வு தேட தயாராகிவிட்ட நிலையில் நாம் யாருக்காக போராடுவது? சரி மக்களை மாற்றுவோம் என போராடினாலும் அதற்கு என்ன பலன் இருக்கிறது. இளைஞர்கள் வெறும் கொள்கையற்ற நடைபிண்டங்களாக வாழும் ஊரில்? நானும் சொந்த ஊரில் வாழ்ந்து அதாவது மேட்டூரிலேயே வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அரசு வேலையோ, பொறுத்தமான தனியார் வேலையோ கிடைக்கவில்லையே. இன்னும் சொல்லப்போனால் என் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையைவிட குறைவான ஒரு பதவியிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். ஏன் நம்மால் எந்த ஒரு அரசியல்வாதியை காட்டிலும் சிறப்பாகவும், திறமையாகவும், துடிப்பாகவும் செயலாற்றமுடியும், அப்படியிருக்க ஒரு மக்கள் விரோத சுயநல அரசியல் குண்டர்களின் ஆளுமையில் நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதற்கு என்ன மாற்று தோழா? நாம் இருவரும் விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. எந்த தாமதமும் இன்றி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும். 24 மணி நேரமும் ஓயாத அலைகளாக மக்கள் புரட்சியுத்தத்தை நடத்தினால் மட்டுமே நாம் விரும்பும் சனநாயகத்தை ஏற்படுத்தமுடியும். அதுவரை விடியல் இல்லை தோழா, தங்களின் விவாதங்கள் வரவேற்கதக்கதே ஆனால் பெருவாரியான மக்கள் இனைந்து களப்பணியாற்றினால் மட்டுமே நாம் விரும்பும் மாற்றத்தை நிகழ்த்தமுடியும். தற்போதைய சமூக கவலையால் நமக்கு மிஞ்சியது வெறும் சமுதாயத்தின் மீதான கவலையும் அதனால் நம் வாழ்வு மீதான வெறுப்பும், அன்றாட வாழ்வின் இனிமைகள் மீது ஒரு விதமான அலட்சியமும், தனிப்பட்ட வாழ்வில் விரக்தியும் தான். இந்த மன உளச்சல்கள் என்னை இளம் வயதிலிருந்து வெகுவாக பாதித்திருக்கிறது, இதே காரணத்தால் நான் எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் ஒருவித கவலையுடனேயே காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறேன். நமக்கெதிரே விகார வடிவெடுத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனீய மற்றும் முதலாளித்துவ கொடுமைகளுக்குள்ளேயே பலரும் வாழ்ந்து பழகிவிட்டனர். இனி இந்த நிலையை மாற்ற மிக பெரியதொரு நீண்ட புரட்சி யுத்தத்தை நடத்த வேண்டியிருக்கும். அப்படியொரு யுத்தத்தை தொடங்கவே நீங்கள் சொல்லும் கால நேரம் வரும் வரை காத்திருக்க எமக்கு பொறுமையில்லை. ஒன்று யுத்ததில் கலந்துகொண்டு போராடவேண்டும் இல்லாவிடில் ஒரு நிம்மதியான வாழ்வையேனும் கண்ணை மூடிக்கொண்டு வாழவேண்டும். அப்படி கண்ணைமூடிக்கொண்டு வாழ்வதால் நிம்மதியிருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்காது ஆனாலும் இந்த வெறுப்பில் இருந்து விடுபடலாம் அல்லவா?

தோழா நீங்கள் தமிழ்மணி என்பவரின் வளைப்பதிவிற்கு எதிர்வினை எழுதமாறு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. உண்மையில் நான் ஒரு கூட்டுடமை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய அதன் பரினாமத்தையும், பல்வேறு நாடுகளில் நடந்த கம்யூனிச புரட்சியை முழுமையாக புரிந்தவனோ அல்ல. அப்படியிருக்க அந்த நபர் கம்யூனிஸ்டுகளை ஏதோ முழுமையாக அறிந்தவனைப்போல உலகின் பல்வேறு மூலைகளில் நடந்த பிரச்சனைகளை எடுத்துரைக்கிறான். அதில் எது உண்மை எவ்வள்வு உண்மை என்பதை நாம் அறியாமல் எதிர்பதிவையோ மறுப்பையோ பதிவு செய்யமுடியாது அல்லவே. குறிப்பாக அந்த விவகாரத்தைப்பற்றி என்ன மறுப்பு கூறாலாம் என்பதைவிட அந்த கூட்டத்திற்கு மக்களை திரட்டி நமது நிலையை வலுவாக எடுத்துக்கூறுவதே வெற்றி. இவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது நம் காலவிரயம் என்பதே எமது கருத்து தோழா.மேலும் நான் இனையத்தளத்தை ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாகவே பார்க்கிறேன், மற்றப்படி உழைக்கும் மக்கள்புரட்சி என்பது இனையதளத்தில் என்ன இருக்கிறது. வளைப்பதிவர்கள் எவ்வளவு பேர் களப்பணியாளர்களாக இருக்கிறார்கள். நீங்கள் வெளியிட்டிருக்கும் போராட்ட அறிவிப்பும் சரி, அதைப்பற்றி தமிழ்மணி என்பவர் எழுப்பியிருக்கும் வினாக்களும் சரி இரண்டுமே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் அப்படியிருக்க அந்த நபரை சட்டை செய்து நாம் எதையும் எழுதிக்கொண்டிருக்க தேவையில்லை. எனக்கு தெரிந்த வரை எந்த இயக்கத்திற்காகவும், கட்சிக்காகவும் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ஒரு பற்றாளனாக என்னைப் போண்றவர்கள் எழுதுவது வெரும் விளம்பரத்திற்காகவும், பாராட்டுதலுக்காகவுமே இருக்கிறது. என்னையே நான் ஒருமுறை நான் எழுதுவதில் எவ்வளவு நடைமுறைபடுத்தியிருக்கிறேன் என்று கேட்டால் மிக குறைவே. அப்படியிருக்க வெற்றுக்கூச்சலால் என்ன பயன் தோழா? செயலில் இறங்கவேண்டும் தோழா, நமக்கு இருக்கும் குடும்ப பற்று சுகவாழ்வை துறந்து மக்களை திரட்ட, போராட, உண்மையான கூட்டுடமை தத்துவத்தை நிலைநிறுத்த நான் என்றுமே தயாராக இருக்கிறேன். நான் ஒரு தனியாளாக போவதைக்காட்டிலும் ஒரு தோழானவது தோழமைக்கு வேண்டும். அந்த தோழமை கிடைக்கும் வரை இப்படி கூச்சல் போட்டுக்கொண்டிருக்க வேண்டியது தான். அந்த தோழமை நீங்களாக இருந்தால் கூட நாம் இப்போதே போராட்டத்தை தொடங்கலாம். சோற்றைப்பற்றி தினமும் கவலைப்பட்டால் எதையும் சாதிக்கமுடியாது. ம.க.இ.க வில் ஒரு உறுப்பினராக இருக்கும் நீங்கள் யாருக்காக வேலை பார்க்கிறீர்கள் என்று பார்த்தால் நாம் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது புரியும், இதனாலேயே நான் வசதியாக எந்த இயக்கத்திலும் சேருவதில்லை. குறைந்தபட்சம் அந்த இயக்கங்களின் பேரையாவது கெடுக்காமல் இருக்கலாம் அல்லவா? எனவே நாம் முழுமையான புரட்சியாளனாக மாறினால் தான் மக்கள் புரட்சி பேசுவதிலும் ஒரு நியாயம் இருக்கும்


No comments: